Odam.in

ஓடம்.in – Tamil Infotainment

Hit enter after type your search item
Odam.in

ஓடம்.in – Tamil Infotainment

கெட்ட வார்த்தை பேசுவோம் – ஒரு சமூக பார்வை

img

கெட்ட வார்த்தை பேசுவோம் எனும் பெருமாள் முருகன் புத்தகத்தை படித்த பின் எனக்கு தோன்றிய கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்.இது புத்தக விமர்சனம் அல்ல, அந்த புத்தகத்தின் வாயிலாக எனக்கு தோன்றிய கருத்துகளை நமது வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்க்கும் ஒரு சராசரி மனிதனின் கண்ணோட்டம். இந்த புத்தகம் நமது பெருமை என சொல்லப்படும் சங்ககால இலயக்கியங்கள், எழுதப்பட்ட வரலாறுகள் என அனைத்தின் மீதும் ஒரு பெரும் கேள்வியை எனக்கு உண்டாக்கியுள்ளது.

இலக்கியங்களில் கூறப்பட்டவை நமது ஆதி பண்பாடா ,அல்ல அதை பிரதியெடுத்து பதிப்பித்த நூலாசிரியர்களால் செருகப்பட்ட அவர்களின் கருத்து திணிப்பா?, பண்பாட்டு காவலர்கள் என சொல்லப்படும் பேரறிஞர்கள் எவ்வாறு தாங்கள் கட்டமைக்க வேண்டிய சமுதாயத்தை உருவாக்க, தங்கள் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் விதமாக நமது பல இலக்கியங்களை மாற்றி, வார்த்தை ஜாலம் செய்துள்ளனர் என கண்டு அதிர்ச்சியுற்றேன்.

எந்த வார்த்தையும் தன்னளவில் நல்லது, கெட்டது என பிரித்து பார்க்கும் குணாம்சங்களை கொண்டது அல்ல, நாம்தான் அவற்றிக்கு பல பண்புகளை கொடுக்கிறோம், நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்த சொற்கள், திடீரென கெட்ட சொல்லாக மாறி புறக்கனிப்புக்கு உள்ளாகியுள்ளன.எடுத்துக்காட்டாக “சோறு” என்ற வார்த்தைக்கு இரண்டாயிரம் வருட பாரம்பரியம் உண்டு, இன்று அது நமது பண்பாடு நாகரிகத்தில் புறக்கணிக்கப்படுகிறது.

நாம் இன்று படிக்கும் அனைத்து இலக்கியங்களும், பாடல்களும் நமது தமிழறிஞர்களால் படியெடுத்து தரப்பட்டவை. இரண்டாயிரம் வருட பாரம்பரியம் என்றால் குறைந்தது இருபது அறிஞர்களாவது நூற்றாண்டுக்கு ஒரு முறையாவது அதை பிரதியெடுத்து, நம் நூற்றாண்டு வரை கொண்டு சேர்த்துள்ளனர், அவர்களுக்கு தவறாக தெரியாதது, நம் நூற்றாண்டு அறிஞர்கள் அச்சில் ஏற்றும்போது சமூக அக்கறை காரணமாக ஏன் தவிர்த்து விட்டனர் என்பதை பல விளக்கங்களோடு “கெட்ட வார்த்தை பேசுவோம்” நூலின் ஆசிரியர் தெளிவாக கூறியுள்ளார். நமது இயல்பான உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூட வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறோம் காரணம் அவை மறைக்கப்படுகின்றன அல்லது கெட்ட வார்த்தை என ஒதுக்கப்படுகின்றன, பிறகு எப்படி நமது சமூகம் ஆரோக்கியமான ஒன்றாக இருக்க முடியும்.

இன்றும் நமது தமிழ் வார்த்தைகளும் ,பண்பாடும் ஓரளவு இருப்பது வட்டார வழக்கு சொற்களிலும் ,கிராமங்களிலும்தான். இவற்றினால்தான் நமது பண்பாட்டு கலாச்சாரம் என்ன என்பதில் அத்துணை கருத்து வேறுபாடுகள், இத்தனை ஏற்ற தாழ்வுகள்.

இனியும் பண்பாடு,கலாச்சாரம் என்று சொல்லி வெறும் அச்சில் உள்ள வார்த்தைகளை, வாழ்க்கையில் ஏற்ற முயலாதீர்கள். பாரம்பரியம் என்ற பெயரில் ஏட்டு வாழ்க்கை வாழ முற்படாதீர்கள். உங்கள் கலாச்சாரத்தை உங்கள் வாழ்வியலில் தேடுங்கள், பழையவற்றில் இருந்து கற்று கொள்ளுங்கள், புதிய மாற்றங்களை ஆராய்ந்து ஏற்று கொள்ளுங்கள். இன்றைய உலகில் அனைவரோடும் இணைந்து பயணிக்க, அதே நேரத்தில் உங்கள் தனித்தன்மையை முன்னிருந்த இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

எது தமிழ் கலாச்சாரம் என கூறுவது என் நோக்கமல்ல ,ஆனால் அதை புத்தகத்தில்(இலக்கியம்,வரலாறு ) மட்டும் தேடாதீர்கள், நடைமுறை வாழ்க்கையில் தேடுங்கள். “தமிழ் கலாச்சாரம்” என்ற பொதுவான ஒன்று கிடையாது. கலாச்சாரம் என்பது மொழியோடு மட்டும் தொடர்பு கொண்டது அல்ல, அது வாழ்வியலோடு தொடர்பு கொண்டது, நமது வாழ்வு நாம் வாழும் சூழலோடு தொடர்பு கொண்டது, நமது சூழல் நமக்களிக்கப்பட்ட இயற்கை வளங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களோடு தொடர்பு கொண்டது. இந்த தொடர்பை புரிந்து கொண்டால், உலகின் மற்ற மக்களின் கலாச்சாரங்களை புரிந்து கொள்ளவும் முடியும், நாம் நமது கலாச்சாரத்தோடு மகிழ்ச்சியாக வாழவும் முடியும். தெளிவான, திறந்த மனநிலையுடன் விவாதிக்கும் போதும், கருத்துகளை பரிமாறும் போதுதான் நமது அறிவு எல்லைகள் விரிவடையும்.

இந்த அறிவு வெளியில் பயணிக்க இந்த இணையதளம்(odam .in ) ஒரு ஓடமாக இருக்கும்.

This div height required for enabling the sticky sidebar