Odam.in

ஓடம்.in – Tamil Infotainment

Hit enter after type your search item
Odam.in

ஓடம்.in – Tamil Infotainment

“கூ(Koo) செயலி” ட்விட்டர்க்கு மாற்றா? மத்திய அரசின் புதிய யுக்தி பலனளிக்குமா?

img

கூ(koo) செயலியானது ட்விட்டரின் (twitter) பதிவு அம்சங்களை கொண்டு 2020ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக வலைதள செயலி. இந்தியாவின் “சுயசார்பு செயலி” சவாலில் வென்றதன் மூலம் பிரதமர் மோடியின் “மனதின் குரல்” நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.

இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கூ செயலியை பெங்களூரில் உள்ள “பாம்பினேட் டெக்னாலஜிஸ்” என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது தனது வலைத்தளத்தில் ” இந்தியாவில் 10% மக்களுக்கு மட்டுமே ஆங்கிலம் தெரிகிறது, மற்றவர்கள் இந்திய பிராந்திய மொழிகளையே பேசுகிறார்கள். இது இந்தியர்களின் குரலைக் கேட்கும் முயற்சி. அவர்கள் இப்போது தங்கள் தாய்மொழியில் இணையத்தில் பங்கேற்கலாம்” என்ற வாசகத்தை தனது நோக்கமாக பதிவிட்டுள்ளது.

இது இந்தி,தமிழ்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் இயங்கி வருகிறது மேலும் பல இந்திய மொழிகளில் இயக்க திட்டமிட்டுள்ளது. பயனர்கள் தங்கள் கைபேசியின் எண்ணை மட்டும் வைத்து கொண்டு தங்களது கணக்கை தொடங்கலாம். இந்த செயலி பயனர்களை பின் தொடரவும், ஆடியோ,வீடியோ மற்றும் தங்களது மொழிகளில் இடுகைகளை பதிவிடவும், பகிரவும் அனுமதிக்கிறது.

திடீரென “கூ செயலி” பிரபலமாக முக்கிய காரணம் சமீபத்தில் நடைபெற்ற ” மூன்று விவசாய சட்டங்களுகான எதிர்ப்பு போராட்டத்தில்”, அரசுக்கு எதிராக பதவிடப்பட்ட கருத்துகளின் கணக்குகளை முடக்கும் விவகாரத்தில் இந்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான்.

“மேக் இன் இந்தியா” என்ற திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கப்பட்ட இந்த கூ செயலியானது தற்போது ட்விட்டர் மாற்றாக இந்திய அரசால் முன்னெடுக்கப்படுகிறது. தற்போது பல மத்திய அமைச்சர்கள் மற்றும் பொது துறை நிறுவனங்கள் கூ செயலில் தங்களை இணைத்துள்ளனர் .

“மேக் இன் இந்தியா” என்பதை நானும் ஆதரிக்கிறேன் ஆனால் அரசின் இந்த போக்கு மக்களின் கருத்துரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ட்விட்டர் ஒரு உலக பெரு நிறுவனம் என்பதாலும், கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டதாலும் இந்திய அரசின் நடவடிக்கைக்கு தனது மாற்று கருத்தை முன்வைக்கிறது, தங்களது பயனாளர்களின் கருத்துரிமையை பாதிக்கும் வகையில் அவர்களின் கணக்கை முடக்க மாட்டோம் என சொல்கிறது. இதுவே ஒரு இந்திய நிறுவனம் என்றால் இது சாத்தியமா?

அரசு தான் விரும்புவதை மட்டும்தான் மக்கள் பேச வேண்டும் என நினைத்தால் மக்களின் பேச்சுரிமையின் எதிர்காலம் என்னவாவது? அரசுக்கு எதிரான கருத்துகள் என்று மக்களின் பேச்சுரிமையை பறிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. எதிர்காலத்தில் மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதை அச்சுறுத்தும் செயலாகத்தான் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கிறேன்.

சீன அரசின் ஒரு கட்சி ஆட்சிமுறையில் மக்களின் கருத்துகள் மீதான அடக்குமுறையை நாம் பார்க்கிறோம். சீன அரசின் அடக்குமுறையின் கொள்கையை நோக்கி பயணிக்கிறோமோ என அச்சப்படுகிறன். மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாகவும், கன்னியமான முறையிலும் தெரிவிக்க முழு உரிமை வழங்கப்பட வேண்டும்.

“ட்விட்டர்” செயலியோ அல்லது “கூ” செயலியோ மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அரசு இது போன்ற சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் போது, மக்களுக்கு “இந்திய அரசியல் அமைப்பு” வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதையும், தேச பாதுகாப்பை உறுதி செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

This div height required for enabling the sticky sidebar